நீதிமன்றிடம் அர்ச்சுனா எம்.பி முன்வைத்த கோரிக்கை
தன்னை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய அனுமதி கோரி யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா(ramanathan archchuna), தனது சட்டத்தரணிகள் ஊடாக, இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம்,சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
இந்த மனு இன்று(15) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எம். கொபல்லவ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை
இதன்போது, பிரதிவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சேனானி தயாரத்ன, நீதிமன்றத்தின் முன் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த வழக்கு தொடர்பாக ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய தனது கட்சிக்காரருக்கு கால அவகாசம் வழங்குமாறு கோரினார்.
இருப்பினும், அமர்வு முறையாக அமைக்கப்படாததால், மறுநாள் இந்தக் கோரிக்கையை முன்வைக்குமாறு நீதிபதி சட்டத்தரணியிடம் தெரிவித்தார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட மனுவை வரும் 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது.
சிறீதரன் எம்.பியை பற்றி வாய்திறக்க கஷ்டப்படும் கஜேந்திரகுமார்... சம்பந்தன் ஏற்றதையும் சுமந்திரன் குழப்பியதாக புது தகவல்
நாடாளுமன்ற தேர்தல் சட்டம் மீறல்
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, அரச வைத்தியராக பணியாற்றிக்கொண்டே கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தை மீறியுள்ளதாகவும், அதன்படி, அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கத் தகுதியற்றவர் என்றும் குறிப்பிட்டு இந்த மனுவை அபிநவ நிவஹல் பெரமுனவின் தலைவர் ஒஷல ஹெரத் தாக்கல் செய்திருந்தார்
அதன்படி, குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவிழக்கச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |