இலங்கையர்களுக்கு இலவச விசா : இந்தியாவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்தியா (India) செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு இலவச விசாவை வழங்குமாறு இந்திய அரசாங்கத்திடம் வெளிவிவகார அமைச்சு (Ministry of Foreign Affairs) கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை - இந்தியாவுக்கிடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகளை மேலும் விரிவாக்குவதற்கும் வலுப்படுத்துவதற்கும் இது ஏதுவாக அமையும் என்று வெளிவிவகார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜேர்மன், அவுஸ்திரேலியா, சவுதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகளுக்கு இலவச விசா வழங்கப்பட்டுள்ளது.
இலவச விசா
கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து 6 மாதங்களுக்கு இத்திட்டம் நடைமுறையிலுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்ட நாடுகளோடு நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், டென்மார்க், போலன்ட், கசகஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், நேபாளம், இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், பிரான்ஸ், செக் குடியரசு, இதாலி, சுவிஸ்சர்லாந்து, ஆஸ்திரியா, இஸ்ரேல், பெலாரஸ், இரான், சுவீடன், கட்டார், ஓமான், பஹரைன் மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இந்த இலவச விசா திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்த நிலையிலேயே இலங்கை பிரஜைகளுக்கும் இலவச விசா வழங்குவது குறித்து அவதானம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இலங்கையின் இந்த கோரிக்கை தொடர்பில் இந்தியா ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |