உடன் பதவி விலகுங்கள் -அமைச்சரின் அதிரடி உத்தரவு
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவரை உடனடியாக பதவி விலகுமாறு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சுக்கும் அரசாங்கத்திற்கும் அறிவிக்காமல் மகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை வரையான விசேட பேருந்து சேவையை இடைநிறுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
உடன் பதவி விலகுங்கள்
2005 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க இலங்கை போக்குவரத்துச் சபைச் சட்டத்தின் பிரகாரம், இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவை உடனடியாக பதவி விலகுமாறு அமைச்சர் அறிவித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை இலங்கை போக்குவரத்து சபை வேண்டுமென்றே நடைமுறைப்படுத்த தவறியமையே இந்த தீர்மானத்திற்கு முக்கிய காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இலங்கை போக்குவரத்து சபையின் பணிப்பாளர் சபை மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு கிங்ஸ்லி ரணவக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

