யாழ்.போதனா வைத்தியசாலை தீ விபத்தில் ரூபா 100 கோடி மருந்துப் பொருள்கள் நாசம்
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூபா100 கோடி பெறுமதியான மருந்துப் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 9ஆம் திகதி அதிகாலை 1 மணியளவில் இந்த பாரிய தீவிபத்து இடம்பெற்றறமை குறிப்பிடத்தக்கது.
60 வீதம்பெறுமதியான மருந்துகள் அழிவு
இதன்போது, களஞ்சியத்தில் இருந்த 60 வீதம்பெறுமதியான மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அழிந்துள்ளதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் யாழ். போதனா மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளருமான மருத்துவர் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் மருந்து களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால், அங்கிருந்த மருந்துகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை முழுமையாகத் தீக்கிரையாகின.
தீயில் எரிந்த மருந்துகளில் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான, பெறுமதிமிக்க மருந்துகள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மருத்துவமனையின் உள்ளக மருந்தகத்தில் தற்போதுள்ள மருந்துகளைக் கொண்டு அவசரத் தேவைகளைச் சமாளிக்க முடியும் என முன்னதாக சுட்டிக்காட்டப்பட்டது.
மாவட்டத்திலுள்ள ஏனைய மருத்துவமனைகள் மற்றும் வவுனியா, அநுராதபுரம் வைத்தியசாலைகளில் இருந்து மருந்துகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்தோடு, கொழும்பில் இருந்தும் உடனடியாக மருந்துகளைக் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |