அரச பெருந்தோட்ட ஊழியர்களின் கொடுப்பனவுகள் : அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு செலுத்த வேண்டிய ஊழியர் சேமலாப நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) ஆகியவற்றை விரைவில் வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.
வழக்குகள் தாக்கல்
இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார்.
இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |