எரிபொருளுக்கான அதிகபட்ச சில்லறை விலை - அறிமுகமாகும் புதிய முறை
அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுவான வகையில் விலை சூத்திரத்தைப் பயன்படுத்தி எரிபொருளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக தெரிவித்தார்.
நாட்டிற்கு நன்மை கிடைக்கும் வகையில் போட்டித்தன்மை கொண்ட எரிபொருள் விநியோகத்தை உருவாக்குவதே இதன் பிரதான நோக்கமாகும் என அவர் தெரவித்தார்.
கியூ ஆர் குறியீடு தொடர்பான முடிவு

அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னர் எதிர்காலத்தில் கியூ ஆர் குறியீடு தொடர்பான முடிவு எடுக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அதிபர் ஊடக மையத்தில் இன்று (23) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் மேலும் கருத்து கூறியதாவது: “இதுவரையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மட்டுமே எரிபொருள் விலைச் சூத்திரத்தை முன்னெடுத்தது.
பெரும் நன்மை

ஆனால், இந்தப் புதிய முறையின் மூலம் அனைத்து நிறுவனங்களுக்கும் விலை சூத்திரத்தைப் பயன்படுத்தி அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், எதிர்காலத்தில் அதிகபட்ச சில்லறை விலையை மட்டுமே அமைச்சு முடிவு செய்யும்.
ஒரு நிறுவனம் விலையைக் குறைக்கும் போது, ஏனைய நிறுவனங்களும் விலையைக் குறைப்பதன் மூலம் நாடு பெரும் நன்மையை அடையும்” என்றார்.
இதேவேளை, சீனாவின் சினொபெக் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முதலாவது எரிபொருள் கப்பல் எமது நாட்டை வந்தடையும் என இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக தெரிவித்தார்.