இராணுவ பயிற்சி தொடர்பில் சரத் வீரசேகரவுக்கு பதிலடி
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கப்படுவதற்கு முன்னதாக, பொலிஸ் துறையை ஒழுங்குபடுத்துங்கள் என அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய இந்த பதிலடியை வழங்கியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பொலிஸ் நிலையம் செல்லும் உதவியற்றவர்கள், பொலிஸாரால் பல்வேறு வகையான துன்புறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அமைச்சர் சரத் வீரசேகர சமூகத்தின் ஒழுக்கத்திற்காக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவ பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று அவ்வப்போது கூறி வருகிறார். அதற்கு முன்பு அவருக்கு நிறைய வேலை இருக்கிறது என்று நினைக்கிறேன்.
இந்த பொலிஸ் துறையையும், மக்களையும் சமூகத்தையும் கையாள்வதற்கான ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு ஒரு பெரிய பங்கு உள்ளது, ஒரு பிரச்சினை ஏற்படும் போது உணர்ச்சிவசப்படுவதற்கு முன்பு மக்களின் நம்பிக்கையை எவ்வாறு வெல்வது என்பதை சிந்திக்க வேண்டும்.
அதைவிடுத்து 18 வயதுடையோருக்கு இராணுவ பயிற்சி அளிப்பதன் மூலம் பிரச்சினையை தீர்க்க முடியாது.
அதற்கும் மேலாக, பொலிஸ் மீதான உடைந்த நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புங்கள் என அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.