இரட்டை குடியுரிமை சர்ச்சை: விபரங்களை பகிரங்கப்படுத்துமாறு கோரிக்கை!
இரட்டை குடியுரிமையுடன் தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பவர்களின் விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷன தெனிபிடிய (Sudarshana Denipitya) கொரியுள்ளார்.
பிரித்தானியா (UK) குடியுரிமை காரணமாக அண்மையில் டயானா கமகேவின் (Diana Gamage) நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்ட நிலையிலேயே, அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இரட்டை குடியுரிமையுள்ள மேலும் 10 பேர் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி
இந்த நிலையில், தற்போதைய நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்க தகுதியற்றவர்களாக உள்ள அனைவரின் விபரங்களும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென சுதர்ஷன தெனிபிடிய கோரியுள்ளார்.
இரட்டை குடியுரிமையுடன் நாடாளுமன்றத்தில் சிலர் அங்கம் வகிப்பது ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தான் இரட்டை குடியுரிமையை கொண்டவரா என பலர் தொடர்ந்தும் கேள்வியெழுப்பி வருவதாகவும், தனிப்பட்ட ரீதியில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கஷ்டத்தை எதிர்நோக்குவதாக சுதர்ஷன தெனிபிடிய கூறியுள்ளார்.
அத்துடன், இந்த விடயத்தில் ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டுமென அவர் கோரியுள்ளதுடன், எந்தவொரு வெளிநாட்டுக்கும் பயணம் செய்யாத சிலர் இன்றும் நாடாளுமன்றத்தில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |