அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் இருபதாம் ஆண்டு நினைவேந்தல்
அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸ் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவர்களுடன் அக்காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட 22 பேரின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (20) அல்லைப்பிட்டியில் இடம்பெற்றது.
நினைவேந்தலை முன்னிட்டு அல்லைப்பிட்டி சந்தியிலிருந்து அமைதிப் பேரணி ஆரம்பமானது.
கிறிஸ்தவ மதகுருக்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற பேரணி, புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தை சென்றடைந்தது.
ஈழத்தின் வடக்கில் நான்காம் கட்ட ஈழப்போர்
அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் நினைவஞ்சலி நிகழ்வும் விசேட வழிபாடுகளும் இடம்பெற்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவாக அஞ்சலி உரைகளும் நிகழ்த்தப்பட்டன.

2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் திகதி, யாழ்ப்பாணத்திலிருந்து அல்லைப்பிட்டிக்கு சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தபோது அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளாரும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸும் காணாமல் ஆக்கப்பட்டனர்.
அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார், ஈழத்தின் வடக்கில் நான்காம் கட்ட ஈழப்போர் தீவிரமடைந்த காலப்பகுதியில் இடம்பெற்ற முக்கிய மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் இந்த சம்பவத்தின் மூலம் காணாமல் ஆக்கப்பட்டார்.
யாழ்ப்பாணத்திலிருந்து பிற்பகல் 1.45 மணியளவில் அல்லைப்பிட்டிக்கு சென்றதற்கான பதிவும், பிற்பகல் 1.50 மணியளவில் அங்கிருந்து திரும்பியதற்கான பதிவும் பண்ணைப்பாலம் பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரிடம் இருந்ததாக அக்காலத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அதன்பின்னர் இருவரின் நிலை தொடர்பில் உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
உண்மை வெளிப்படுத்தப்படாத நிலை
20 ஆண்டுகள் கடந்தும் அவர்களது நிலை தொடர்பில் உண்மை வெளிப்படுத்தப்படாத நிலையில், காணாமல் ஆக்கப்பட்ட 22 பேரையும் நினைவுகூரும் வகையில் இன்றைய நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் மறைமாவட்ட குருக்கள் ஒன்றிய தலைவர் அருட்பணி எஸ். றெக்ஸ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் மா. இளப்பிறை, சட்டத்தரணி க. சுகாஸ், கொழும்பைச் சேர்ந்த அருட்தந்தை செராட் மற்றும் யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு தலைவர் அருட்தந்தை அ. அகஸ்ரின் ஆகியோர் அஞ்சலி உரைகளை நிகழ்த்தினர்.
அஞ்சலி நிகழ்வு அல்லைப்பிட்டி பங்குத்தந்தை அருட்தந்தை லியோ பாதர் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் கிறிஸ்தவ மதகுருக்கள், பொதுமக்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தினர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








