தோல்வியை மறைக்கவா ரிஷாட் கைது செய்யப்பட்டார்? அரசாங்கத்திடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கேள்வி
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரரை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா புதியசாளம்பைக்குளம் பள்ளிவாசலுக்கு முன்பாக குறித்த ஆர்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த ஆர்பாட்டகாரர்கள்...
ரிஷாட் பதியூதீனை அதிகாலையில் சென்று கைதுசெய்யப்பட்டதையிட்டு வேதனையடைகின்றோம். அவரது கைதுக்கு வன்மையாக கண்டனங்களை தெரிவிக்கின்றோம்.
அரசாங்கம் தன்னுடைய தோல்வியை மறைப்பதற்காக இவ்வாறான கைதுகளை முன்னெடுத்துவருகின்றது. அவர் அமைச்சராகவிருந்து பல்வேறு அபிவிருத்திகளை வன்னி மாவட்டத்திலே முன்னெடுத்தவர்.
எனவே அவர் விடுதலை செய்யப்படவேண்டும். நாட்டின் ஆட்சியாளர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தவேண்டும் என்றனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் “யாரைத்திருப்திப்படுத்த இந்த கைது” - “சர்வதேச உறவுகளே அவரின் விடுதலைக்காய் குரல்கொடு” - “சிறுபாண்மைதலைமைகளை விடுதலைசெய்” - போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.