இலங்கையில் காட்டுத் தீ அபாயம்!
இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலையினால் காட்டுத் தீ அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டுத் தீ அதிகரிப்பு மற்றும் அதனைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இவ்விடயம் தெரியவந்துள்ளது.
தற்போது நிலவுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக தோட்டங்களில் அதிகளவான தீப்பரவல்கள் பதிவாகியுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் (2022) பதிவாகிய 78 காட்டுத்தீயுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் (2023) அதிகளவாக 123 காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நிலவும் வறண்ட காலநிலையுடன், கவனக்குறைவான மனித நடவடிக்கைகளினால் காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், முகாமிடும் குழுக்கள் காரணமாகவும் இவ்வாறான செயற்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனவே இவ்வாறான காடுகள் அழிக்கப்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில் அனைவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் பல செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காணுங்கள்