ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவரிடம் ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள வேண்டுகோள்!
பயங்கரவாத தடைச் சட்டம் மூலம் கைது செய்யப்பட்டுள்ள சிறைக் கைதிகளுடைய விடுதலை தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியம் அதிக அக்கறை செலுத்துகின்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் செய்பியை அண்மையில் சந்தித்து கலந்துரையாடியுள்ள ரிஷாட் பதியுதீன் பல்வேறு காரணிகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பின் போது கடந்த காலங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவியதற்காக தனது நன்றிகளை தெரிவித்த ரிஷாட் பதியுதீன் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், இலங்கைக்குமான நீண்டகால உறவு குறித்து நினைவுபடுத்தியுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் அநியாயமாகக் கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கின்ற தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் பலர், தமது கைதை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்குக்கூட பொருளாதார வசதிகள் இன்றி மிகவும் சிரமப்படுகின்றனர். பொருளாதார ரீதியில் அவர்களது குடும்பங்கள் கஷ்டப்படுகின்றன. இதனால், அவர்களுக்கான நியாயம் கிடைப்பது கூட அரிதாகவுள்ளது.
எனவே, கடந்த காலங்களைப் போன்று ஐரோப்பிய ஒன்றியம், பாதிக்கப்பட்டுள்ள கைதிகளின் நலனுக்கு தமது ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்க வேண்டும்’ எனவும் அவர் வேண்டிக்கொண்டார்.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட இன்னும் பல அறிஞர்கள், புத்திஜீவிகள், மாணவர்கள் என பலரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு, சிறையில் இருப்பதையும் ரிஷாட் பதியுதீன் தூதுவரிடம் சுட்டிக்காட்டினார்.
இதன்போது, கருத்து தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் செய்பி,ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்பில், நீதியமைச்சின் ஊடாக, நீதிமன்றங்களின் திறனை அதிகரிக்கும் மூன்று வருட செயற்றிட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.