கடும் நிபந்தனைகளுடன் ரிசாட்டின் சகோதரர் விடுதலை
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் (Riyaz Badurdeen) கடுமையான நிபந்தனைகளின் கீழ் உயர் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் கைதான ரியாஜ் பதியுதீனுக்கு, பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்ட விதிகளின் கீழ் ரிசாட் பதியூதீன் மற்றும் ரியாஜ் பதியூதீன் ஆகியோர் ஆரம்பத்தில் 72 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டனர்.
எனினும் மேலதிக விசாரணைகளுக்காக இரண்டு சகோதரர்களையும் 90 நாட்களுக்கு காவலில் வைக்க குற்றப்புலனாய்வு பிரிவினர் பின்னர் அனுமதி பெற்றிருந்தனர்.
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளை நடத்திய தற்கொலைப் படைத் தீவிரவாதிகளுக்கு உதவியதாக கூறப்படும் குற்றச்சாட்டை பதியுதீன் சகோதரர்கள் மறுத்துள்ளனர்.
இந்தக் கைது மற்றும் தடுப்புக் காவலின் மூலம் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பிணை உத்தரவைக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இரண்டு தனித்தனியான அடிப்படை உரிமை மனுக்களை இருவரும் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் ரியாஜ் பதியூதீனை கடுமையான நிபந்தனைகளுடன் விடுவிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.