ரிசாட்டின் கைது கண்டனத்துக்குரியது - இம்ரான் எம்.பி காட்டம்
முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் ரிஷாட் பதியுதீன் சீஐடி யினரால் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரியது.
சபாநாயகருக்கு அறிவிக்கப்படாமல் நீதிமன்ற பிடியாணை எதுவுமில்லாமல் இவ்வாறு தான்தோன்றித்தனமாக நாட்டின் பொறுப்புவாய்ந்த பாதுகாப்புத் துறை நடந்து கொள்வது இந்தத் துறைகள் தேசிய நலனில் அக்கறையின்றி ஆட்சியாளரின் விருப்பு வெறுப்புகளுக்கு இசைவாக இயங்கும் இயந்திரமாகியுள்ளதை எடுத்துக்காட்டுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிசாட்டின் இன்றைய கைது தொடர்பில் இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,
2015 ஆம் ஆண்டுக்கு முன்னைய ராஜபக்ச அராஜக ஆட்சியின் இரண்டாம் கட்டம் கொவிட் வைரஸை விட மோசமாக கோரத்தாண்டவமாடுவதை இது உறுதிப்படுத்துகின்றது.
கைது செய்துவிட்டு காரணம் தேடுகின்ற காட்டு நீதி தான் 69 இலட்சம் மக்களது எதிர்பார்க்கை என்பது போல அரசாங்கம் நடந்துகொள்வதை நிறுத்த வேண்டும்.
தமது ஆதரவாளர்கள் என்பதற்காக குற்றவாளிகளை விடுதலை செய்து விட்டு தமக்கு வேண்டாதவர்களை கைதுசெய்த பின் காரணம் தேடுகின்ற கேலிக்கூத்தை அரசாங்கம் நிறுத்த வேண்டும் - என்றுள்ளது.