ரிஷாட்டைப் போன்று இன்னும் பலர் கைது செய்யப்படலாம்! எச்சரித்த அமைச்சர் காமினி லொக்குகே
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் கைதுக்குப் பின்னால் எந்தவொரு அரசியல் நோக்கமும் இல்லை என போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தள்ளார்.
எதிர்காலத்தில் இன்னும் பலர் கைது செய்யப்படலாம் எனத் தெரிவித்த அமைச்சர் காமினி லொக்குகே, விசாரணைகள் சுயாதீனமாகவே இடம்பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை ரிஷாட் பதியூதீனின் கைதானது வெறும் அரசியல் பழிவாங்கலே என்று எதிர்கட்சியினர் முன்வைத்து வருகின்ற குற்றச்சாட்டைஅமைச்சர் முற்றாக நிராகரித்துள்ளார்.
இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
ஈஸ்டர் தாக்குதல் பற்றிய விசாரணைகளை புலனாய்வுப் பிரிவிடம் நாங்கள் ஒப்படைத்திருக்கின்றோம். அதில் அரசாங்கத்தின் தலையீடுகள் எதுவும் இல்லை. அவர்கள் இன்று விசாரணைகளை நடத்திவருகின்றனர்.
ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்டவர்களைக் கண்டுபிடிப்பது அரசாங்கத்தின் கடமையென்பதோடு மக்களும் அதனையே எதிர்பார்த்துள்ளனர்.
புலனாய்வுப் பிரிவுக்கும், சட்டமாஅதிபருக்குமே கைதுகளை செய்வதற்கான அதிகாரம் உள்ளது. இந்த விவகாரத்தில் எந்தவொரு அரசியல் பழிவாங்கலும் இல்லை.
இதனை அரசியல் பழிவாங்கல் என்று கூறுகின்ற தற்போதைய எதிரணியினர் ஆளுங்கட்சியாக இருந்தபோது மஹிந்த ராஜபக்சவின் புதல்வர்கள், அமைச்சர்கள் என பலரையும் சிறையில் அடைத்தார்கள். ஆனால் அதே பாணியில் நாங்கள் பயணிக்கமாட்டோம்.
அதேபோல தற்போதைய அரசாங்கமே இந்தத் தாக்குதலையும் நடத்தியதாக சிலர் விமர்சிக்கின்ற போதிலும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான அசோக அபேசிங்க இதுபற்றி தெரிவித்திருந்த சந்தர்ப்பத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது அங்கு வந்து மன்னிப்புக் கேட்டார். இதுவே இன்றைய எதிர்கட்சியின் நிலையாகும் என்றார்.