வேட்டையாடும் கலாசாரத்தை கைவிடுங்கள் – இலங்கை அரசிடம் கோரிக்கை
சிறுபான்மை அரசியல் தலைவர்களை வேட்டையாடுகின்ற அரசியல் கலாசாரத்தை அரசாங்கம் கைவிட்டு, கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனை உடனடியாக விடுதலை செய்யுமாறு கட்சியின் தவிசாளர் அமீர் அலி கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் விடுதலையை வலியுறுத்தி, கொழும்பில் நேற்று (30) இடம்பெற்ற போராட்டத்தில் பங்கேற்று கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
ரிஷாட் பதியுதீன் ஒரு சிறுபான்மை மக்களின் தலைவர். ஜனநாயக முறைப்படி நாடாளுமன்றம் தெரிவானவர்.
அவ்வாறான ஒருவரை, ஜனநாயகத்தை மதிக்காத முறையில் கைது செய்து, தடுப்புக் காவலில் வைத்திருப்பது, ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகத்துக்கும் கவலை தருகின்றது. எமது கட்சியும் இவரின் கைதினால் துவண்டுபோயுள்ளது.
சிறுபான்மை அரசியல் தலைவர்கள் வேட்டையாடப்படுகின்ற இந்த அரசியல் கலாசாரத்தை தயவு செய்து கைவிட்டு, நீதியான முறையில் நடந்துகொள்ளுங்கள்.
ஜனாதிபதி, பிரதமர், சட்டமா அதிபர் ஆகியோருக்கு இந்த வேண்டுகோளை நாம், விடுப்பதோடு, அரசியலை மையப்படுத்தி இனிமேலும் செயற்படுவதை நிறுத்துமாறு வேண்டுகின்றோம்.
சிறுபான்மை தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை இவ்வாறு கைது செய்வது, ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் என்பதில் இரண்டுபட்ட கருத்தில்லை என்றார்.