ஆதரவு யாருக்கு? ரிசாட் எடுத்துள்ள தீர்மானம்
தான் விளக்கமறியலில் இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் தாம் கூட்டணி அமைக்கவில்லை எனப் பொருள்பட பதில் வழங்கியதாக அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியூதீன் (Rishad Bathiudeen) தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது மேலும் பதில் வழங்கிய அவர்,
“நாம் வேறு கட்சி, கடந்த அரச தலைவருக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரை அரச தலைவராக்குவதற்கு முயற்சி செய்தோம்.
எனினும், எமது கட்சி ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைக்கவில்லை.
இருந்தாலும், நாடாளுமன்றத்தில் நான் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து, எதிர்க்கட்சியின் கடமைகளையே முன்னெடுத்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
இதன்போது குறுக்கிட்ட ஊடகவியலாளர் ஒருவர், எதிர்வரும் காலத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கப் போவதில்லையா? என கேள்வி எழுப்பினார்.
தான் அவ்வாறு கூறவில்லை எனவும், தான் விளக்கமறியலில் இருக்கும் சந்தர்ப்பத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரிடம் இவ்வாறான கேள்வியொன்று எழுப்பும் போது, தாம் கூட்டணி அமைக்கவில்லை என அவர் பதிலளித்ததாக ரிசாட் பதியூதீன் சுட்டிக்காட்டினார்.