ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய சிறுமி மரணம்- வாக்குமூலங்கள் பதிவு
நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில், தீ காயங்களுடன் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பாக வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருதாக ஸ்ரீலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சிறுமி பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்த நிலையில் ரிஷாட் பதியூதின் மனைவி உள்ளிட்ட பலரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய டயகம பகுதியை சேர்ந்த சிறுமி, தீ காயங்களுடன் கடந்த 3ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 15ஆம் திகதி உயிரிழந்தார்.
இந்த விடயம் தற்போது தென்னிலங்கையில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், காவல்துறை விசாரணைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், இன்றைய தினம் காலை ஊடக சந்திப்பை நடத்திய ஸ்ரீலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண, சிறுமியின் மரணம் குறித்து பல்வேறு தரப்பிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, பொரளை காவல்துறையினர், கொழும்பு தெற்கு பெண்கள் மற்றும் சிறுவர் விசாரணை பிரிவு என்பன இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை, சிறுமியை டயகம பகுதியிலிருந்து கொழும்புக்கு வீட்டு வேலைக்காக அழைத்து வந்த நபரிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேநேரம் ரிஷாட் பதியூதீனின் மனைவியின் தாய் மற்றும் தந்தை ஆகியோரிடம் நேற்றைய தினம் மீண்டும் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.