ரிஷாட் வீட்டில் உயிரிழந்த சிறுமி அஜித் ரோஹண வெளியிட்டுள்ள அறிவிப்பு!
ரிஷாட் பதியுதின் வீட்டில் பணியாற்றிய சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதேவேளை புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ் குழுவினர் சிறுமி வசித்த அவிசாவளை, புவக்பிட்டி - கிரிவந்தல பிரதேசத்தில், நான்கு பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த சிறுமி, கல்வி கற்ற பாடசாலையின் அதிபர் மற்றும் உப அதிபரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அஜித் ரோஹண தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
ரிஷாட்டின் வீட்டில் பணியாற்றிய ஆண் பணியாளரின் கைபேசியை பொலிஸார் சில தினங்களுக்கு முன்னர் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளது. இந்நிலையில், குறித்த கைபேசியில் ஏதேனும் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள பொரளை காவல்நிலைய பொறுப்பதிகாரியினால் அந்த கைபேசி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அது குறித்து அறிக்கை ஒன்றும் பெறப்படவுள்ளது. இதேநேரம், இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியாக விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கைபேசித் தரவுகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்கும், வங்கிக் கணக்கை ஆராய்வதற்கும் நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய, இந்தத் தரவுகளின் அறிக்கைகளைப் பெற்றுக்கொண்டு தொடர்ந்து பகுப்பாய்வுக்குட்படுத்தி, விசாரணைகள் முன்னெடுக்கப்படள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே பொரளை பொலிஸாருக்கும் மேலதிகமாக, இரண்டு விசேட குழுக்கள் விசாரணைகளை மேற்கொள்கின்றன. கொழும்பு தெற்கு பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினரும், கொழும்பு தெற்கு பிரிவு குற்றவியல் விசாரணைப் பிரிவினரும் இந்த விசாரணைகளை மேற்கொள்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
குறித்த குழுக்கள், டயகம பகுதிக்கு சென்று, சிறுமியின் தாயாரிடம் இன்று மீளவும் வாக்குமூலம் பெறவுள்ளதுடன், ஏனைய சிலரிடமும் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன. இதேநேரம், மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.