அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வியாபார நிலையத்துக்கு 5 இலட்சம் அபராதம்
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கொழும்பு - வெள்ளவத்தையில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு ரூபாய் 5 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று (05.05.2026) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தொடர்ச்சியாக நடத்தப்படும் சோதனை நடவடிக்கைகளின் போது இந்த மீறல் கண்டறியப்பட்டுள்ளதாக விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
ஒரு கிலோ அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை ரூ.230 என நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும் அதே அரிசியை கிலோ ஒன்றுக்கு ரூ. 320 என விற்று, நுகர்வோரிடமிருந்து ரூ. 90 அதிகமாக அறவிடப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தி நுகர்வோரைச் சுரண்டும் வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும், அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் போது அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை சரிபார்க்குமாறும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக பணம் செலுத்த வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு சபை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய மீறல்களை ஆதாரங்களுடன் உடனடியாக அறிவிக்குமாறும், நுகர்வோர் விவகாரங்கள் ஆணையத்தின் 1977 என்ற துரித இலக்கம் வழியாக முறைபாடுகளை பதிவு செய்யலாம் என்றும் விவகார அதிகார சபை பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |