ஈரான் விவகாரத்தின் எதிரொலி...! நேட்டோ மீது டொனால்ட் ட்ரம்ப் பாய்ச்சல்
ஐரோப்பாவில் அமெரிக்க இராணுவ வீரர்களை நிலைநிறுத்துவதில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்து வரும் முரண்பட்ட முடிவுகளால் நேட்டோ உறுப்பு நாடுகளிடையே எழுந்துள்ள குழப்பத்தைத் தணிக்க அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ முயன்றுள்ளார்.
சுவீடனில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் இது குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், உலகளாவிய பாதுகாப்புச் சூழலுக்கு ஏற்ப ஐரோப்பாவில் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கை மாற்றியமைக்கப்படுவதாகவும் இது கூட்டணி நாடுகளுடன் கலந்தாலோசித்தே செய்யப்படுகிறது என்றும் விளக்கமளித்துள்ளார்.
அரசியல் மோதல்
சமீபத்தில் ஜெர்மனியுடனான அரசியல் மோதலால் அங்கிருந்து 5000 அமெரிக்க வீரர்களைத் திரும்பப் பெற உத்தரவிட்ட ட்ரம்ப், அதே நேரத்தில் தனது ஆதரவாளர் ஜனாதிபதியாக இருக்கும் போலந்து நாட்டிற்கு கூடுதலாக 5000 வீரர்களை அனுப்புவதாக அறிவித்தார்.
ட்ரம்பின் இந்த அதிரடி மாற்றங்கள் ஐரோப்பிய நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் அமெரிக்காவிற்கு உதவ மறுத்ததே ட்ரம்பின் இந்த அதிருப்திக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ட்ரம்ப் தனது 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' கொள்கையின்படி ஐரோப்பாவில் அமெரிக்கப் படைகளைக் குறைக்க திட்டமிட்டு வருவதால் ஐரோப்பிய நாடுகள் தங்களின் பாதுகாப்பிற்கு இனி அமெரிக்காவைச் சார்ந்திருப்பது குறையும் என நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |