ருஹுன பல்கலை மாணவர்களுக்கு கொரோனா தொற்று - விடுதிகளை விட்டு வெளியேற அனுமதி மறுப்பு
ருஹுன பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 13 மாணவர்கள் கொவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாகவும் எனினும் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூட அரசாங்கம் முடிவு செய்த போதிலும் அதிகாரிகள் தொடர்ந்து மாணவர்களை விடுதிகளில் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மாணவர் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் இது தொடர்பில் தெரிவிக்கையில், விஞ்ஞானம், விவசாயம் மற்றும் முகாமைத்துவ பீடங்களில் இருந்தே தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதாகத் தெரிவித்தார்.
எழுந்தமானமான சோதனைகளிலிருந்து தொற்றுக்கள் பதிவாகியிருந்தாலும் மாணவர்கள் விடுதிகளில் தங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மாணவர்களுக்கு முககவசங்கள் எவையும் கூட வழங்கப்படவில்லை என்று தொழிற்சங்கம் தெரிவித்தபோதிலும் அதிகாரிகள் ஏன் மாணவர்களை விடுதிகளில் தொடர்ந்து வைத்திருக்கிறார்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் அனைவரும் பல்கலைக்கழக சிற்றுணடிச்சாலையையே நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொவிட் தொற்றை அடுத்து ஏப்ரல் 27 அன்று பல்கலைக்கழகங்களை திறப்பதற்கான முடிவை நிறுத்தி அனைத்து பல்கலைக்கழகங்களையும் மே இறுதி வரை மூட அரசாங்கம் முடிவு செய்தது.