இடிந்து விழுந்த மந்திரிமனையை இருட்டில் பார்வையிட அமைச்சர்கள்
யாழ்ப்பாணம் (Jaffna) இராச்சியத்தின் அடையாளமாக உள்ள மந்திரிமனையை பாதுகாப்பதற்கு தேவையான அத்தனை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மக்களுடைய பூர்வீக அடையாளங்களை நிலை நிறுத்துகின்ற மிக முக்கியமாக சங்கிலிய மன்னன் வாழ்ந்த காலத்தில் இருந்த மந்திரிமனை நேற்றுமுன்தினம் மழை காரணமாக ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தது.
இடிந்து வீழ்ந்த மந்திரிமனையை நேற்று (18) மாலை நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னரே இராமலிங்கம் சந்திரசேகர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பகுதியளவில் சேதம்
மந்திரிமனை இடிந்து வீழ்ந்து பகுதியளவில் சேதம் அடைந்துள்ள நிலையில் அதனை பார்வையிடுவதற்காக அமைச்சர்களான பிமல் ரத்நாயக்கா, இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், தொல்லியல் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் யு.ஏ பத்துலஜீவ, தொல்லியல் திணைக்களத்தின் புனர்நிர்மாண உத்தியோகத்தர் கபிலன் ஆகியோர் சென்றிருந்தனர்.
அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்த பின்னர், அது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது துறைசார் அமைச்சரின் கவனத்துக்கு இந்த விடயம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், யாழ்ப்பாணம் இராச்சியத்தின் அடையாளமாக உள்ள மந்திரிமனையை பாதுகாப்பதற்கு தேவையான அத்தனை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
