வாக்களித்த மக்களையே அவமானப்படுத்திய ஆட்சியாளர்கள்: அநுர குமார பகிரங்கம்
இலங்கையின் முன்னாள் ஆட்சியாளர்கள் தமக்கு வாக்களித்த மக்களையே அவமானப்படுத்தியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் நேற்றையதினம் (18) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் இறுதி பிரச்சார கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வெற்றியில் பங்கு
அதன் போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இதுவரை நல்ல அபிலாஷைகளுடனும் அரசாங்கத்தை கொண்டு வர நம்பிக்கையுடனும் மக்கள் வாக்களித்தனர்.
2015 இல் ரணில்-மைத்திரி அரசாங்கத்தை அமைப்பதற்கு இலட்சக்கணக்கான மக்கள் வாக்களித்தனர், பின்னர் கோட்டாபய அரசாங்கத்தைக் கொண்டுவர 6.9 மில்லியன் மக்கள் வாக்களித்தனர்.எனினும் ஆட்சியாளர்கள் தமக்கு வாக்களித்த மக்களை குறுகிய காலத்திலேயே அவமானப்படுத்தினர்.
எங்களுக்கு வாக்களிக்கும் மக்களின் கண்ணியத்தை பாதுகாப்போம் என்று உறுதியளிக்கிறோம். எங்கள் வெற்றியில் அனைவரும் பங்கு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைய தக்க வைத்துக் கொள்ள நாங்கள் பொறுப்புடன் செயல்படுவோம்.
பழைய, தோல்வியுற்ற பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நவீன உலகம் மற்றும் உலகின் புதிய போக்குகள் ஆகியவற்றுடன் ஒத்துப்போகத் தவறியதால் நாடு பொருளாதார குறைபாடுகளை சந்தித்தது, இப்போது தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தை மாற்றுவதற்கான நேரம் இது.
ரணில் - மகிந்த
ரணில் விக்ரமசிங்க 47 வருடங்களாக எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர், ஜனாதிபதி எனப் பல்வேறு பதவிகளில் நாடாளுமன்றத்தில் இருந்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச 54 வருடங்களாக நாடாளுமன்றத்தில் பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார். அவர்கள் பின்வாங்கி அதிகாரத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
எமது அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையிலும் உயர் தரத்திலும் தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்யும்.
நமது ஆட்சியாளர்கள் நமது உற்பத்திகளை அழித்து எல்லாவற்றையும் இறக்குமதி செய்யத் தொடங்கினர். நமது தோல்வியடைந்த பொருளாதாரக் கொள்கைகளால் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்தது.
வரவை அதிகரிக்கவும், டொலர்கள் வெளியேறுவதைக் கட்டுப்படுத்தவும் புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவோம். இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |