உக்ரைனின் மிகப்பெரிய மின்சார உற்பத்தி நிலையத்தை தாக்கி அழித்தது ரஸ்யா!
உக்ரைனின் தலைநகர் கீவ், செர்காசி, ஜைடோமிர் மாகாணங்களுக்கு மின்சாரம் வழங்கி வந்த டிரைபில்ஸ்கா என்ற மிகப்பெரிய மின்சார உற்பத்தி நிலையத்தை ரஷ்யா தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மின்சார உற்பத்தி நிலையம் எரிந்து ஒரு குறிப்பிட்ட தூரம் வரை புகை மூட்டமாக காட்சி அளித்ததாகவும், அது பயங்கரமானது எனவும் ஆலையை நிர்வகிக்கும் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாகவே உக்ரைனின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மொஸ்கோ தெரிவித்துள்ளது.
அதிக மின்சார தேவை
டிரைபில்ஸ்கா உற்பத்தி நிலையம் சுமார் 3 மில்லியன் நுகர்வோருக்கு மின்சாரம் வழங்கி வந்த நிலையில் இந்த வருடத்தில் இப்போது இதன் தேவை சற்று குறைவாக இருப்பதால் இந்தத் தாக்குதல் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் வரவிருக்கும் கோடைக்காலத்தின்போது காற்றுச்சீராக்கி (AC) அதிகளவில் பயன்படுத்தப்படும் என்பதால் அதிக மின்சார தேவை ஏற்படும். அப்போது பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
கார்கிவில் உள்ள எரிபொருள் கட்டமைப்பு மீது 10-க்கும் மேற்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த மாகாணத்தில் 2 லட்சம் மக்களுக்கு மேல் வசித்து வருவதனால், தொடர்ந்து அவர்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்படுவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைப்பு
பெரிய அளிவலான தாக்குதல் எங்களுடைய எரிசக்தி துறையை மோசமாக பாதித்துள்ளதாக உக்ரைன் எரிசக்தி துறை அமைச்சரும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு போர் ஆரம்பித்ததில் இருந்து ரஷ்யா இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த மாதம் உக்ரைனின் எரிசக்தி தொடர்பான கட்டமைப்புகள் மீது அதிக அளவில் தாக்குதல் நடத்தியது. இதனால் நாட்டின் பாதி அளவிலான பகுதிகள் இருளில் மூழ்கியது.
இந்த தாக்குதல் உக்ரைன் நாட்டிற்கான எச்சரிக்கை எனக் கருதப்படுகிறது. மேலும் இதுபோன்ற வான் தாக்குதலை சமாளிக்க அதிகப்படியான வான் பாதுகாப்பு அமைப்பு தேவை என அதிகாரிகள் கேட்டு வரும் நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |