உக்ரைன் போரில் பங்கேற்ற 49 பேரை நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்த ரஷ்யா
உக்ரைனுக்கு எதிரான போரில் பங்கேற்ற 49 பேர் ரஷ்யாவின் புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவில் கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆளும் யுனைடெட் ரஷ்யா கட்சி 450 இடங்களைக் கொண்ட டூமாவில் 355 இடங்களை கைப்பற்றியுள்ளது.
இதன் மூலம் அக்கட்சி நாடாளுமன்றத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான பெரும்பான்மையைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யா ஆக்கிரமித்துள்ள பகுதி
இதற்கு முன்னர் 2016ஆம் ஆண்டு அக்கட்சி 343 இடங்களைப் பெற்றிருந்தது. 2022ஆம் ஆண்டு உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழுமையான படையெடுப்புக்குப் பின்னர் நடைபெறும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும்.

யுனைடெட் ரஷ்யா கட்சியின் பொதுச் செயலாளர் விளாடிமிர் யாகுஷேவ், மாஸ்கோவின் சிறப்பு இராணுவ நடவடிக்கையில் பங்கேற்ற 86 முன்னாள் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக முதலில் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் அந்த எண்ணிக்கை 49 ஆகத் திருத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட தேர்தலை மேற்கத்திய நாடுகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா காலஸ், இந்தத் தேர்தல் ரஷ்ய ஜனநாயகத்துக்கு மற்றொரு மிகப்பெரிய பின்னடைவு என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கிரெம்ளின் எதிர்ப்புக் குரல்களை ஒடுக்கியதுடன், சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களையும் அனுமதிக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |