புடினைக் கொலை செய்யத் திட்டம்? அரசியல் உயர்மட்டத்தில் உருவாகும் குழு!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை படுகொலை செய்ய திட்டமிடும் செல்வாக்கு மிக்கவர்களின் குழு ரஷ்ய வணிக மற்றும் அரசியல் உயர் பிரிவினர் மத்தியில் உருவாகி வருவதாக உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சின் உளவுப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த குழு, புடினை விரைவில் அதிகாரத்தில் இருந்து அகற்றுவதையும், உக்ரைனில் நடந்த போரினால் அழிக்கப்பட்ட மேற்கு நாடுகளுடன் பொருளாதார உறவுகளை மீட்டெடுப்பதையும் நோக்காக கொண்டுள்ளது.
ரஷ்யாவின் பிராந்திய பாதுகாப்பு சேவை பணிப்பாளர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவை, புடினின் வாரிசாக கருதுகிறார்கள். உக்ரைனிய மக்களின் கருத்துக்களையும் உக்ரைனிய இராணுவத்தின் திறனையும் பகுப்பாய்வு செய்வதற்கு போர்ட்னிகோவ் மற்றும் அவரது துறைக்கு பொறுப்பளிக்கப்பட்டிருந்தது.
எனினும் அவரின் தவறான கணக்கீடுகளே உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட வீழ்ச்சிக்கான காரணம் என்று உக்ரைன் உளவுத்துறை கூறியுள்ளது. இந்த நிலையில் போர்ட்னிகோவ் மற்றும் ரஷ்ய உயர் பிரிவின் சில செல்வாக்கு மிக்க உறுப்பினர்கள் புடினை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கான பல்வேறு வாய்ப்புக்களை பரிசீலித்து வருகின்றனர் என்பது அறியப்படுகிறது.
குறிப்பாக, விஷம், திடீர் நோய் அல்லது விபத்து என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் அமையலாம் என்றும் உக்ரைனிய உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை உக்ரைன் உளவுத்துறையின் கூற்றுப்படி, ரஷ்யர்கள், உக்ரைன் நாட்டின் தலைமையை அகற்ற மற்றொரு பயங்கரவாத குழுவை உக்ரைனுக்கு அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புடினுக்கு நெருக்கமான ரஷ்ய பிரசாரகரும், லிகா (வாக்னர்) என்ற ரஷ்ய கூலிப்படையின் உரிமையாளருமான Yevgeny Prigozhin உடன் தொடர்புடையவர்கள் உக்ரைனுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
அவர்களின் முக்கிய பணி உக்ரைனின் உயர்மட்ட இராணுவ மற்றும் அரசியல் தலைமையை அகற்றுவதாகும்.
உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, கூலிப்படைகளின் முக்கிய "இலக்குகள் அதிபர் ஸெலென்ஸ்கி, எண்ட்ரி யெர்மக் மற்றும் டெனிஸ் ஷ்மிஹால் ஆகிய அதிகாரிகளாகும் என்றும் உக்ரைனிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
