உக்ரைனின் அதிரடி தாக்குதல்! வெடித்துச் சிதறிய பாலம் - இருவர் பலி
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைனின் கிரிமியன் தீபகற்பத்தை ரஷ்யாவுடன் இணைக்கும் கெர்ச் பாலத்தில் சில மாதங்களுக்கு பின்னர் மீண்டும் உக்ரைனிய புலனாய்வுத்துறை இன்று அதிகாலை ஒரு அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது.
கடற்பரப்பில் இருந்து ஏவப்பட்ட ஆளில்லா வான்கலங்களில் பொருத்தப்பட்ட வெடிகுண்டுகள் வெடித்ததால் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.
உக்ரைன் போரில் பின் தளம்

2014 ஆம் ஆண்டில் ரஷ்யாவால் பலவந்தமாக இணைக்கப்பட்ட கிரிமியா தீபகற்பம் தற்போது உக்ரைன் மீதான போரில் ரஷ்யப் படைகளுக்கு, முக்கியமாக பின் தளமாக செயற்பட்டு வருகிறது.
இதனால் கிரிமியா தீபகற்பத்தை தெற்கு உக்ரைனுடன் இணைக்கும் வழிகள் மீது உக்ரைனிய தாக்குதல்கள் இடம்பெறும் நிலையில், கடந்த ஒக்டோபர் உக்ரைனிய ரகசிய சேவை நடத்திய சக்திவாய்ந்த வெடிப்பால் சேதமடைந்த கெர்ச் பாலம் மீண்டும் குறிவைக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3 மணிக்குப் பின்னர் பாலத்தின் 145 ஆவது தூண் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து பாலத்தின் மீதான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
На телеканале «Крым 24» показали поврежденную часть Крымского моста. Видео снято из вагона поезда. pic.twitter.com/91eMrwnzRG
— The Insider (@the_ins_ru) July 17, 2023
கருங்கடல் தானிய ஒப்பந்தம்
இந்தத் தாக்குதலுக்கு தற்போது உக்ரைன் பொறுப்பேற்றதையடுத்து உக்ரைனுடனான கருங்கடல் தானிய ஒப்பந்தம் நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு யூலையில் துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் வெளிவந்த இந்த ஒப்பந்தம், இன்று மாலை முடிவடையும் நிலையில் இந்த ஒப்பந்தங்களின் ஒரு பகுதி இதுவரை செயற்படுத்தப்படவில்லையென்பதால் குறித்த ஒப்பந்தம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த முடிவுக்கும் கிரிமியன் பாலத்தின் மீது உக்ரைனால் உரிமை கோரப்பட்ட தாக்குதலுக்கும் தொடர்பு இல்லையென ரஷ்யா கூறுகிறது.
இதற்கிடையே கிரிமியா பாலம் மீதான தாக்குதலுக்கு உக்ரைனின் பாதுகாப்பு சேவை பொறுப்பேற்றுள்ளதுடன், இந்த தாக்குதல் உக்ரைனிய கடற்படையுடன் நடத்தப்பட்ட ஒரு கூட்டு நடவடிக்கையெனவும் அறிவித்துள்ளது.
இதேவேளை உக்ரைனிய கடல்வழி ஆளில்லா விமானங்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ள ரஷ்யா தனது தரப்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்தத் தாக்குதலின் போது குறித்த பாலத்தால் பயணித்த தம்பதி ஒன்று உயிரிழந்துள்ளதுடன் அவர்களின் மகள் காயமடைந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.