உக்ரைன் ரஷ்யப் போரில் களமிறங்கும் வடகொரியா : ரஷ்யாவுடன் கை கோர்க்கும் கிம் ஜாங் உன்
உக்ரைன் ரஷ்யப் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியாவின் இராணுவம் களமிறங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தகவலை வட கொரியாவும் உறுதி செய்துள்ளதுடன், போரினால் சேதமடைந்துள்ள தளபாடங்களை பராமரிக்கவும் ஆட்களை அனுப்ப வட கொரியா ஒப்புக்கொண்டுள்ளது.
ஆனால், உக்ரைனில் களமிறங்கும் வட கொரிய இராணுவம் இருவேறு பிராந்தியங்களின் பெயரில் செயல்படும் என்றே கூறப்படுகிறது.
முதற்கட்டமாக, 100, 000 வீரர்களை வட கொரியா ரஷ்யாவை ஆதரித்து தன்னார்வலர்கள் படையை உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் களமிறக்க முடிவு செய்துள்ளது. இதற்கு கைமாறாக எரிசக்தி மற்றும் தானியங்களை ரஷ்யா வழங்க முடிவு செய்துள்ளது.
ரஷ்ய இராணுவ நிபுணர்
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அளிக்கவிருக்கும் ஆதரவை ரஷ்யா பெறுவதில் குறைமதிப்பு ஏதுமில்லை என ரஷ்ய இராணுவ நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வட கொரிய மக்கள் எதிர்ப்பு மற்றும் எதிர்பார்ப்பு ஏதுமற்றவர்கள் எனவும் ஆனால் அவர்கள் துடிப்பு மிக்கவர்கள் எனவும் அவர் பாராட்டியுள்ளார்.
உக்ரைனின் பாசிச அரசாங்கத்திற்கு எதிராக களமிறங்க முன்வரும் சர்வதேச நாடுகளுக்கு எப்போதும் ரஷ்யாவின் ஆதரவு இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரிய போர்
1948ல் இருந்தே ரஷ்யாவும் வட கொரியாவும் நட்பு பாராட்டி வந்துள்ளதுடன் கொரிய போர் காலகட்டத்தில் வட கொரியாவுக்கு ஆதரவாக சோவியத் ரஷ்யா களமிறங்கியிருந்தது.
இதேவேளை, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த ஐந்து நாடுகளில் வடகொரியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.