உக்ரைன் களமுனையில் திருப்பம் - போரின் முடிவை வெளிப்படுத்திய அமெரிக்கா
மேலதிக ஆயுத உதவி கோரிக்கை
உக்ரைனை ஆக்கிரமித்த ரஷ்ய படையினருக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்துவதற்கு மேலதிக ஆயுத உதவிகளை உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி மேற்குலக நட்பு நாடுகளிடம் கோரியுள்ளார்.
நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கில் ரஷ்ய படையினர் வசமிருந்த 6 ஆயிரத்திற்கும் அதிகமான சதுர கிலோமீற்றர் பரப்பளவை தமது படையினர் மீளக் கைப்பற்றியுள்ளதாகவும் உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.
உக்ரைனின் வட கிழக்கு கெர்கீவ் பிராந்தியத்தில் முக்கிய நகரங்களில் இருந்து வெளியேறியுள்ளதை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், இது யுத்தத்தின் முக்கிய திருப்புமுனை என சில இராணுவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
ரஷ்யாவின் பின்வாங்கல்
எனினும் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பிராந்தியங்களில் கவனம் செலுத்தும் வகையில் படைகளை மீள ஒருங்கிணைக்கும் நோக்குடன் தமது படையினர் பின்வாங்கியுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.
உக்ரைன் படையினர் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியுள்ளதாக கூறியுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கன், போரின் முடிவை உடனடியாக கணிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் கணிசமான படையினர் மற்றும் ஆயுதங்களுடன் வெடி பொருட்களும் உக்ரைனில் உள்ளதாக கூறியுள்ள அவர், இவற்றை உக்ரைன் படையினர், பொதுமக்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் என பாரபட்சம் இன்றி ரஷ்யா பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னரங்க பகுதிகளில் கடுமையான தாக்குதல்
கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி உக்ரைன் மீதான விசேட படை நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் உத்தரவிட்டதுடன், தற்போதும் உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதி ரஷ்ய படையினர் வசம் காணப்படுகின்றது.
இதனிடையே உக்ரைனின் அனைத்து முன்னரங்க பகுதிகளிலும் கடுமையான பதில் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் படையினரை இலக்கு வைத்து அனைத்து முனைகளில் இருந்தும் விமானம், உந்துகணை மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
