அமெரிக்கா ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை..! ரஷ்யா மீது ‘பாரிய’ ட்ரோன் தாக்குதல்
ரஷ்ய (Russia) தலைநகர் மொஸ்கோ மீது உக்ரைன் “பாரிய” ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி இன்று (11.03.2025) அதிகாலை 4 மணிக்கு (01:00 GMT) நடந்த தாக்குதலில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் மொஸ்கோ பிராந்திய ஆளுநர் ஆண்ட்ரி வோரோபியோவ் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை தொடர்ந்து விமான நிலையங்கள் மூடப்பட்டதாகவும், குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம்
எவ்வாறாயினும், இந்த தாக்குதலின் போது ஒரே இரவில் 337 உக்ரேனிய ட்ரோன்களை அழித்ததாகவும், அவற்றில் 91 மொஸ்கோ பிராந்தியத்தில் இருந்ததாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறும் பேச்சுவார்த்தைகளின் போது ரஷ்யாவுடன் பகுதி போர்நிறுத்தத்திற்கான திட்டத்தை உக்ரைன் அமெரிக்காவிற்கு முன்வைக்கத் தயாராக இருக்கும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்க உக்ரேனிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் சவுதி அரேபியாவில் கூடியுள்ளனர்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் இராணுவ உதவி
இந்நிலையில், ரஷ்ய - உக்ரைன் போரில் உக்ரைனுக்கு வழங்கும் உதவியை நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்ததையடுத்து உக்ரைனுக்கு பிரான்ஸ் இராணுவ உதவியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக இன்று (11) பாரீஸ் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.
இதில் 30 நாட்டிற்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என பிரான்ஸ் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
திடீரென ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் ஒரு சில மணி நேரத்திற்குள் அல்லது ஓரிரு நாட்களில் உக்ரைனுக்கு இராணுவத் தளபாடங்களை அனுப்புவதுதான் பாதுகாப்புப் படையின் முதன்மையான நோக்கமாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 3 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்