கருங்கடலில் கப்பல்கள் மீது கண்ணிவெடிகளை பயன்படுத்தும் ரஷ்யா : பிரித்தானியா எச்சரிக்கை
கருங்கடலில் பொதுமக்கள் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதலை நடத்த ரஷ்யா கண்ணிவெடிகளை பயன்படுத்த வாய்ப்புள்ளது என பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, உக்ரைனின் துறைமுகங்களுக்கு செல்லும் வழியில் கருங்கடல் கப்பல் வழித்தடத்தில் நுழைவதற்கு தயாராக உள்ள வகையில் 12 சரக்குக் கப்பல்களை உக்ரைனின் கடற்படை நிறுத்தியுள்ளது.
இந்நிலையில் தானிய ஏற்றுமதியை எளிதாக்க உக்ரைன் நிறுவிய இந்த வழியாக பயணிக்க இருக்கும் இந்த பொதுமக்களின் கப்பல்களைத் தடுப்பதற்கு ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
உளவுத்துறை தகவல்கள்
அதற்காக கடல் கண்ணிவெடிகளைப் பயன்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ள ரஷ்யா, அதற்கான பரிசீலிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
பொதுமக்கள் செல்லும் கப்பல்களை வெளிப்படையாக மூழ்கடிப்பதை விடுத்து இந்த முறையினை கையாண்டு கப்பல்களை தடுத்து, உக்ரைன் மீது பொய்யான பழி சுமத்த ரஷ்யா திட்டமிட்டு வருவதாக பிரித்தானியா குற்றம் சாட்டியுள்ளது.
எனவே, தமக்கு கிடைத்த இந்த உளவுத்துறை தகவல்களை வெளியிடுவதன் மூலம் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கப்பட வேண்டும் என்பதே தமது நோக்கம் என்றும் பிரித்தானியா அறிவித்துள்ளது.
முக்கிய ஏற்றுமதி வழித்தடமான கருங்கடல் வழியாக உணவுப் பொருட்களை பாதுகாப்பாக அனுப்ப உக்ரைனுக்கு அனுமதித்த ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா கடந்த ஜூலையில் வெளியேறியதை தொடர்ந்தே இவ்வாறான செயற்பாடுகளை ரஷ்யா நிகழ்த்தி வருகின்றது.