சுவீடனை தாக்க தயாராகும் ரஷ்யா - பாதுகாப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கை
சுவீடனுக்கு எதிராக ரஷ்யா இராணுவத் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாத அச்சுறுத்தல் என்று சுவீடன் நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் குழு அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, சுவீடனும் நேட்டோ உறுப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளதோடு, நாட்டின் பாதுகாப்புப் படைகளின் பலத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதனால், ரஷ்ய தரைப்படைகள் உக்ரைன் போரின் நடுவில் இருந்தாலும், சுவீடனுக்கு எதிராக ரஷ்யா மற்றொரு வகையான இராணுவ தாக்குதலை நடத்தாது என்று எதிர்பார்க்க முடியாது என சுவீடன் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதுகாப்பு உத்தி
இந்நிலையில், சுவீடன் நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவின் அறிக்கை, ரஷ்யா தனது இராணுவ சக்தியைப் பயன்படுத்துவதற்கான வரம்பை மேலும் குறைத்துள்ளது என்றும், ரஷ்யா அதிக அரசியல் மற்றும் இராணுவ அபாயத்தை எடுக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.
இதன் விளைவாக, ரஷ்யா நீண்ட தூர ஏவுகணைகள் அல்லது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி சுவீடனைத் தாக்கும் அபாயம் இன்னும் இருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால், சுவீடனுக்கு புதிய பாதுகாப்பு உத்தியை உருவாக்க வேண்டும் என்று அந்நாட்டு நாடாளுமன்ற குழு அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.


