உக்ரைன் போரக்களத்தில் அணு ஆயுத பாவனை - தீவிர பேச்சில் ரஷ்ய படைத்தளபதிகள்
உக்ரைனில் உள்ள போர்க்களத்தில் அணு ஆயுதங்களை எப்படி, எப்போது பயன்படுத்தலாம் என்று ரஷ்யாவின் சிரேஷ்ட இராணுவத் தளபதிகள் கடந்த மாதம் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டதாக இரண்டு அமெரிக்க அதிகாரிகள் சிபிஎஸ் செய்தியிடம் தெரிவித்தனர்.
எனினும் இந்த பேச்சில் விளாடிமிர் புடின் பங்கேற்கவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
அதிகமாக அக்கறை

கடந்த சில மாதங்களாக உக்ரைனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து "அதிகமாக அக்கறை" அதிகரித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஆனால் ரஷ்யா அத்தகைய பயன்பாட்டிற்கு தயாராகி வருவதற்கான எந்த அறிகுறியையும் அமெரிக்கா காணவில்லை என்று அது வலியுறுத்தியது.
தகவலை உதாசீனப்படுத்தக் கூடாது

கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் மேற்கு நாடுகளை "வேண்டுமென்றே இந்த விடயத்தை முன்னிலைப்படுத்துவதாக " குற்றம் சாட்டினார், இருப்பினும் ஒக்டோபர் நடுப்பகுதியில் இந்த விடயம் தொடர்பில் உயர்மட்ட ரஷ்ய இராணுவ பேச்சுக்கள் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கசிந்துள்ள தகவல் உண்மையாக இருக்கவே வாய்ப்பு என குறிப்பிட்டுள்ள வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி நாம் இந்த தகவலை உதாசீனப்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உக்ரைன் போர்க்களத்தில் ரஷ்யாவின் ஆதிக்கம் குறைந்து வருவதால், அதன் அணுசக்தி அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.