ரஷ்யப் பெண் சுற்றுலாப் பயணியிடம் அத்துமீறல்...! போலி சுற்றுலா வழிகாட்டி கைது
காலி - உனவட்டுனை பகுதியில் ரஷ்யப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவரைத் தாக்கி, பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி, பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உனவட்டுனை சுற்றுலாப் காவல்துறையினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுலா வழிகாட்டிக்கான அனுமதிப்பத்திரமின்றி சுற்றுலா வழிகாட்டியாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு குறித்த ரஸ்ய பெண்ணிடம் அத்துமீறியதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகம் மற்றும் தலையில் தாக்குதல்
கடந்த நவம்பர் 05ஆம் திகதி சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகை தந்து, உனவட்டுனை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 40 வயதுடைய ரஷ்யப் பெண் ஒருவரே இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகளின்படி, சந்தேகநபர் தன்னை சுற்றுலா வழிகாட்டி என அறிமுகப்படுத்தி, கடந்த 12ஆம் திகதி இரவு 10 மணியளவில் இரவு உணவு உட்கொள்வதற்காக அழைத்துச் செல்வதாகக் கூறி, அவரை முச்சக்கரவண்டியில் காலி நகருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதன்போது, குறித்த பெண்ணுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுக்க சந்தேகநபர் முயற்சித்துள்ளார்.
இதற்கு அவர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சந்தேகநபர், அவரது கையடக்கத் தொலைபேசியைப் பறித்ததுடன், 35,000 ரூபாய் பணம் கோரி மிரட்டியுள்ளார்.
பின்னர், மீண்டும் முச்சக்கரவண்டியில் ஹோட்டலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, குறித்த பெண்ணின் முகம் மற்றும் தலையில் சந்தேகநபர் தாக்கியதுடன், அவரிடமிருந்த 20,000 ரூபாய் பணத்தையும் பலவந்தமாகப் பறித்துள்ளார்.
காலி பிரதான நீதவான் நீதிமன்றம்
இதன்போது, முச்சக்கரவண்டி சாரதி உடனடியாகத் தலையிட்டு தாக்குதலைத் தடுத்ததுடன், பெண்ணின் பயணப் பொதியையும் பாதுகாக்க மீட்க உதவியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் கடந்த 13ஆம் திகதி உனவட்டுனை சுற்றுலாப் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதற்கிடையில், விசா காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவர் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளார்.
சாட்சியங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக காலி தலைமையகப் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கொள்ளை, தாக்குதல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் உரிய அனுமதிப்பத்திரமின்றி சுற்றுலா வழிகாட்டியாகச் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர் நாளை (19) காலி பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உனவட்டுனை சுற்றுலாப் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |