ரஷ்யப் படையினரால் தாக்கி அழிக்கப்பட்ட உக்ரைனின் இராணுவப் படகு
அமெரிக்காவால் உக்ரைனிற்கு வழங்கப்பட்ட இராணுவப் படகு ஒன்றை ரஷ்யப் படைகள் அழித்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
ஏராளமான உக்ரைன் வீரர்கள் இந்தப் படகில் பயணித்ததாகவும், கருங்கடல் பகுதியில் உள்ள பாம்பு தீவுக்குக் கிழக்கே சென்று கொண்டிருந்த வேளையே இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.
ஏறத்தாழ 1 ½ ஆண்டுகளை கடந்து ரஷ்ய-உக்ரைன் போர் நிகழ்ந்து வருகின்றது, இந்த போரிலே உக்ரைனின் நகரங்களை ரஷ்யா ஏவுகணைகளைக் கொண்டு தாக்கி அழித்து வருகின்றது.
இதற்கு பதில் தாக்குதல் நடத்தும் முகமாக உலக நாடுகளின் உதவியுடன் உக்ரைனும் ரஷ்யாவை எதிர்த்து போரிட்டு வருகிறது.
போர் விமானம் மூலம்

உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள் இராணுவ விமானங்கள், ஏவுகணைகள் என்பவற்றை வழங்கி உதவி வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய இராணுவ படகு ஒன்றை ரஷ்ய படையினர் அழித்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனிய வீரர்கள் குழுவை ஏற்றிச் சென்ற படகை ரஷ்ய வீரர்கள் போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்களை ரஷ்யா சுட்டு வீழ்த்தியது

ஆனால் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து இது தொடர்பாக எந்த கருத்தும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது ஓர் முக்கியமான விடயமாகும்.
கருங்கடலில் உள்ள பாம்புத் தீவானது உக்ரைனின் ஒரு சிறிய புறக்காவல் நிலையமாகும்.
போருக்கு மத்தியில் அங்கிருந்து தானியங்களை அனுப்ப உக்ரைனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா கடந்த மாதம் வெளியேறியது.
இந்த நிலையில் அந்த பகுதியில் உக்ரைன் வீரர்களை ரஷ்யா சுட்டு வீழ்த்தியது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்..