உக்ரைனை சரமாரியாக தாக்கும் ரஷ்யா!! மக்கள் நிலமை கவலைக்கிடம்
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் குறைந்தது 43 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா நடத்திய குறித்த தாக்குதல்களில் கார்கிவில் உள்ள குடியிருப்பு கட்டடங்கள், ஒரு குழந்தைமனை மற்றும் பிராந்திய ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் உள்ளிட்ட இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஷாகெட் ட்ரோன்கள்
அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது தாக்குதல் தொடர்பில் நகர மேயர் இஹோர் தெரெகோவ் கூறுகையில், “பத்துமணிநேரத்துக்குள் ஆறு ஷாகெட் ட்ரோன்கள் கார்கிவில் வீழ்த்தப்பட்டன.
இவை “குடியிருப்புகள், வாகனங்கள் மற்றும் பொதுமக்கள்” என்பவற்றையே குறிவைத்தன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இரண்டு தாக்குதல்களையும் இணைத்து 43 பேர் காயமடைந்துள்ளனர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கார்கிவ் மீதான தொடர் தாக்குதல்
2022 பெப்ரவரியில் ரஷ்யா முழுமையான படையெடுப்பை ஆரம்பித்ததிலிருந்து, உக்ரைனின் முக்கிய நகரமான கார்கிவ் தொடர்ந்து தாக்குதல்களுக்கு இலக்காகி வருகிறது.
கடந்த இரவில் பல இடங்களில் ரஷ்யா ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி இருந்தாலும், அவற்றுள் கார்கிவ் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, உக்ரைனின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள சபோரிசியா நகரிலும், ஒரு காலை ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 17 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், பல குடியிருப்புகள் மற்றும் ஒரு பல்கலைக்கழகக் கட்டடம் சேதமடைந்துள்ளதாக ஆளுநர் இவான் ஃபெடரோவ் கூறியுள்ளார்.
உக்ரைனின் பாதுகாப்பு
மேலும், தெற்கு நகரமான ஓடெஸாவில் ஒருவருக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யா மேற்கொண்ட விமானத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான உக்ரைனிய குடிமக்கள் உயிரிழந்துள்ளனர்.
எனினும், ரஷ்யா, “நாங்கள் குடிமக்களை நேரடியாகக் குறிவைப்பதில்லை, உக்ரைனின் போர் முயற்சிக்கு ஆதரவு தரும் உள்கட்டமைப்புகளையே குறிவைக்கிறோம்” கூறி வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, உக்ரைனின் பாதுகாப்பை மேம்படுத்த மேற்கத்திய நாடுகள் மேற்கொண்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
