ரணிலுக்கு எதிரான புதியசதி குறித்து எச்சரிக்கை
இலங்கையின் நெருக்கடி நிலை மேம்பட்டுள்ள நிலையில், தற்போது எதிர்க்கட்சி உள்ளிட்ட சில அரசியல் தரப்புக்கள் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
பியகம் பகுதியில் நடைபெற்ற கட்சி கூட்டமொன்றில் உரையாற்றிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்த்தன, இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சிறிலங்கா அதிபராக பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட தரப்பினரிடம் முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்ச கடந்த ஆண்டு கோரிய போது, அதனை ஏற்க அனைவரும் மறுத்திருந்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜயவர்த்தன நினைவூட்டியுள்ளார்.
சதி திட்டங்கள்
இந்த நிலையில், தமது கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க சவால்களுக்கு மத்தியில் சிறிலங்கா அதிபராக பதவியேற்றிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் ராஜபக்ச குடும்பத்தினரை காப்பற்றுவதற்காக அவர் பதவியேற்கவில்லை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து, இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்க தேவையான வழிமுறைகளை ரணில் விக்ரமசிங்க அறிந்திருந்ததாகவும் அந்த நடைமுறையின் மூலம் தற்போது இலங்கையின் பொருளாதார நிலை படிப்படியாக மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போது அதிகாரத்தை கைப்பற்ற பல தரப்பினர் சதி திட்டங்களை மேற்கொண்டு வருவதாக ருவான் விஜயவர்த்தன குற்றஞ்சாட்டியுள்ளார்
