பிரதித் தலைவர் பதவியை விட்டுக் கொடுத்தாரா ருவான்? ஐ.தே.க தலைமையின் முடிவு இதுதான்
கட்சியை வலுப்படுத்தக்கூடிய ஒருவருக்கு தனது பிரதித் தலைவர் பதவியை கையளித்து விட்டு, தான் அந்த பதவியை இராஜினாமா செய்ய தயாராகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன (Ruwan Wijewardene) தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற செயற்குழுக்கூட்டத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், கட்சித் தலைவரை சூழவுள்ள சிலர் மாத்திரமே கட்சிக்குள் உள்ளதாகவும் கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
கட்சிக்காக முன்னின்று செயற்பட்ட ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake) நவீன் திஸாநாயக்க (Naveen Dissanayake), மற்றும் அர்ஜுன ரணதுங்க (Arjuna Ranatunga) ஆகியோருக்கு எந்த பதவிகளும் வழங்கப்படாது, ஓரங்கட்டப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த சந்தர்ப்பத்தில் கட்சி உறுப்பினர்கள் பல பிரிவுகளாக பிரிந்திருக்கக்கூடாது. கட்சியிலுள்ள அனைவரையும் ஒன்றிணைத்து கொண்டு, கட்சியை வலுவாக்க வேண்டும்.
இவ்வாறு செயற்பட தவறும் பட்சத்தில், கட்சி மேலும் சிதைவடையும் என அவர் கூறியுள்ளார். அதனால், கட்சியை வலுப்படுத்தக்கூடிய ஒருவருக்கு தனது பிரதித் தலைவர் பதவியை கையளித்து விட்டு, தான் அந்த பதவியை இராஜினாமா செய்ய தயார். தனக்கு கட்சியின் தலைமைத்துவத்தை பெற்றுக்கொள்வதற்கான எண்ணம் கிடையாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.