பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கோரும் ஈழத்தமிழர்! அரசின் முடிவு
இலங்கை அகதிகள் தொடர்பில் 2021ஆம் ஆண்டு பிரித்தானிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மாற்றம் இல்லை எனவும் பிரித்தானியாவுக்கு அகதி தஞ்சம் கோரி வருபவர்களை ருவாண்டா நாட்டில் விசாரணை செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாகவும் பிரித்தானியாவில் இருக்கும் மூத்த சட்டத்தரணி அருண் கனநாதன் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடுமையான விதி
மேலும் அவர் தெரிவிக்கையில், பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கோருபவர்கள் தொடர்பில், அந்த அரசாங்கம் கடுமையான விதிகளை கடைப்பிடித்து வருகின்றது.
புகலிடக் கோரிக்கையாளர்களை குறைப்பதற்காக புதிய சட்டமூலங்களை அந்த அரசாங்கம் உருவாக்கி வருகின்றது.
பெரும்பாலான நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காகவே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ருவாண்டாவில் அகதி தஞ்சம் கோரி வருபவர்களை அந்த நாடு அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்காமல் அகதிகள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே திருப்பி அனுப்பும் நிலை காணப்படுகிறது.
இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டே பிரித்தானிய உயர் நீதிமன்றம் அரசின் நடவடிக்கையை ஏற்காது புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
உயர் நீதிமன்ற தீர்ப்பை நாடாளுமன்றம் கேள்விக்குட்படுத்தினால் அரசியலமைப்புச் சர்ச்சை எழும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.