காவல்துறை மா அதிபர் குறித்து அவதூறு : விசாரணை வளையத்துள் சாகர
காவல்துறை மா அதிபர் குறித்து சிறிலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் மற்றும் சட்டத்தரணி சாகர கரியவாசம் தெரிவித்த கருத்து தொடர்பாக, விசாரணையைத் தொடங்குமாறு காவல்துறை மா அதிபர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
நேற்று(03) ஒரு செய்தியாளர் சந்திப்பைக் கூட்டிய பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் மற்றும் சட்டத்தரணி சாகர கரியவாசம், காவல்துறை தொடர்பாக அரசாங்கத்திற்கும் காவல்துறை மா அதிபருக்கும் எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அனுர ஆட்சியில் துரதிஷ்டமான நிலையில் காவல்துறை
அப்போது, தற்போதைய அரசாங்கம் காவல்துறையை மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலையில் வைத்துள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார்.

முன்னதாக, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மூன்று முன்னாள் காவல்துறை மா அதிபர்கள் மிகவும் துயரமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேர்ந்தது. மேலும், தற்போதைய காவல்துறை மா அதிபர் அரசாங்கத்திற்குச் சேவை செய்வதை நிறுத்திவிட்டு மக்களுக்குச் சேவை செய்யத் தொடங்க வேண்டும் என்று சாகர கரியவாசம் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
பொதுமக்களால் காவல்துறை மா அதிபர் அடித்தே கொல்லப்படுவார்
அவ்வாறு செய்யாவிட்டால், தற்போதைய காவல்துறை மா அதிபர் நெடுஞ்சாலையில் பொதுமக்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட 37வது காவல்துறை மா அதிபராக வரலாற்றில் இடம்பிடிக்கக்கூடும் என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில் காவல்துறை மா அதிபரின் அறிவுறுத்தல்களின் பேரில், சாகர கரியவசம் தெரிவித்த கருத்து குறித்து மத்திய குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மேலும், சட்டத்தரணி சாகர கரியவசம் வரும் நாட்களில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவர் நேற்று தெரிவித்த கருத்து குறித்து விசாரணை தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |