சர்ச்சைக்குரிய கொள்கலன்கள்: ஜப்பானில் ஜனாதிபதியின் உரைக்கு மொட்டுக் கட்சி பதில்!
சர்ச்சைக்குரிய சிவப்பு லேபிள் கொள்கலன்களை விடுவிக்க உத்தரவிட்டது ஜனாதிபதியா அல்லது பிமல் ரத்நாயக்கவா என்பதை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தங்காலையில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் கொள்கலன்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானில் கருத்து தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி வெளியிட்ட இந்த கருத்து தொடர்பில் சாகர காரியவசம் இன்று கேள்வியெழுப்பியுள்ளார்.
சர்வதேச புலனாய்வுத் தகவல்
ஊடக சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “போதைப்பொருள் கொள்கலன் குற்றச்சாட்டை நாமல் ராஜபக்ச மீது சுமத்த பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பல முயற்சிகளில் ஈடுபட்டார்.
இந்நிலையில், கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு போதைப்பொருள் கொள்கலன்களும் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே சுங்கத்தலிருந்து விடுவிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஜப்பானில் தெரிவித்துள்ளார்.
எனினும், குறித்த கொள்கலன்கள் தொடர்பில் சர்வதேச புலனாய்வுத் தகவல்கள் ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ளன.
தற்போதைய அரசாங்கத்தின் காலப்பகுதியில் அதாவது கடந்த டிசம்பரில் இந்த கொள்கலன்கள் நாட்டை வந்தடைந்துள்ள நிலையில் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் இந்த கொள்கலன்கள் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
ஆகவே, இவ்விடயத்தில் நாமல் ராஜபக்ச மீது குற்றம் சுமத்தாமல் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சர்ச்சைக்குரிய கொள்கலன்கள்
இதேவேளை, இதற்கு முன்னரும் 12 தடவைகள் நம்பிக்கையின் அடிப்படையில் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அப்படியெனில், எந்தவொரு சோதனைகளும் இன்றி சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் யாருடைய உத்தரவின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டன என்பது தொடர்பில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கலன்கள் சுங்கத்தால் பரிசோதிக்கப்பட்டவை! ஜப்பானில் அநுர விளக்கம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
