வெளிநாடொன்றில் சிக்கிய கஞ்சிபானி இம்ரானின் நிதிப்பொறுப்பாளர் : வெளிவரும் பல தகவல்கள்
‘ரத்மலானே சைமா’என்பவர் மலேசியாவில் கைது செய்யப்பட்ட நிலையில் கஞ்சிபானி இம்ரானின் நிதிப் பொறுப்பாளராகச் செயற்பட்டமை காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலேசியாவில் தலைமறைவாக இருந்த கெஹல்பத்ர பத்மேவுக்கும் அவர் உதவி செய்துள்ளார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மலேசிய காவல்துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையில், தனுஷ்க கௌசல்யா என்ற ரத்மலானே சைமா உட்பட மூன்று பேரை இலங்கை காவல்துறை குழு ஒன்று சமீபத்தில் கைது செய்தது.
கஞ்சிபானி இம்ரானின் நிதி பொறுப்பாளர்
விசாரணையின் போது, குற்றவாளி கஞ்சிபானி இம்ரானின் அனைத்து நிதி விவகாரங்களையும் அவரே கையாண்டது தெரியவந்தது.

சந்தேக நபரான சைமா, கஞ்சிபானி இம்ரானின் சமூக ஊடக நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.
கஞ்சிபானி இம்ரானின் அறிவுறுத்தலின் பேரில், கடந்த ஆண்டு கெஹல்பத்தர பத்மே மலேசியாவில் பதுங்கிக்கொள்ள இவர் உதவியுள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை அச்சுறுத்தலை அடுத்து மாறிய நட்பு
தற்போது பிரான்சில் தலைமறைவாக உள்ள குடு அஞ்சுவின் நெருங்கிய கூட்டாளியாக இவர் சில காலமாக இருந்து வந்ததாகவும், பின்னர் கஞ்சிபானி இம்ரானுடன் கைகோர்த்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

சைமாவைக் கொல்ல குடு அஞ்சு திட்டமிட்டிருந்த நிலையில், கஞ்சிபானி இம்ரான் இதுகுறித்து சைமாவிடம் தெரிவித்த பிறகு, அவர் கஞ்சிபானியுடன் நட்பு பாராட்டினார்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இவர் மலேசியாவுக்குத் தப்பிச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |