ரணிலின் சதிகளை முறியடிப்பவரே சஜித்: ஐக்கிய மக்கள் சக்தி கொள்கை பரப்புச் செயலாளர் திட்டவட்டம்
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) தொடர்ச்சியான சதிகளை முறியடிப்பதன் மூலம் வெற்றி காண்பவரே சஜித் பிரேமதாச (Sajith Premadasa) என ஐக்கிய மக்கள் சக்தியின் திருமலை மாவட்டத்திற்கான கொள்கை பரப்புச் செயலாளர் எம் எம் மஹ்தி தெரிவித்துள்ளார்.
அவர், இன்று (06) வெளியிட்ட ஊடக அறிக்கை ஒன்றிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த எம் எம் மஹ்தி, 1994 ம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் (Ranisinghe Premadasa) மனைவி ஹேமா பிரமதாஸ வேட்பு மனு பத்திரத்தில் கையொப்பம் வைத்த பிறகு அவரின் பெயரை நியமனப் பத்திரத்தில் இருந்து நீக்கியதன் மூலம் பெரும் துரோகத்தை அரங்கேற்றினார்.
[C3XJY1G ]
தலைமைத்துவ செயற்பாடு
கொழும்பிலே பிறந்து வளர்ந்த சஜித் பிரேமதாச முதன் முதலாக நாடாளுமன்ற தேர்தல் கேட்க தயாரான போது சம்பந்தமே இல்லாத ராஜபக்ச குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் விண்ணப்பிக்க செய்ததன் மூலம் இன்னொரு சதியை அரங்கேற்றினார். அம்மாவட்டத்தில் வெற்றி பெற்று அச் சதியை சஜித் முறியடித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவராக வரவேண்டிய அனைத்து தகுதிகளும் பலமும் இருந்தும் சஜித் பிரேமதாசவிற்கு அப் பதவியை வழங்காது பல குழிபறிப்புகளை அரங்கேற்றியும் அவற்றை எல்லாம் முறியடித்து ஐ.தே.க வுக்கு பிரதி தலைவரானார்.
ரணில் விக்ரமசிங்க தமது தலைமைத்துவ செயற்பாடுகளின் மூலம் முப்பதுக்கும் மேற்பட்ட தேர்தல்களில் தொடர் தோல்விகளுக்கு முகம் கொடுத்ததன் காரணமாக ஐ.தே.க.வின் கட்சித் தொண்டர்களும் கட்சியின் முக்கியஸ்தர்களும் அதிருப்தியடைந்தார்கள்.
கவலையில் உறைந்த கட்சிக்காரர்கள் கட்சியை மீட்டு வளர்ச்சியடையச் செய்ய வேண்டுமானால் சஜித் பிரேமதாச கட்சிக்கு தலைவராக்கி ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிடச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்தது. அதன் பிரதி பலனாக 2019 ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பாக சஜித் பிரேமதாச போட்டியிட்டார்.
சஜித் பிரேமதாச
தேர்தல் பிரச்சாரப் பணிகள் உச்சமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சஜித் பிரேமதாச கட்சி சார்பாக எந்த ஒரு பங்களிப்பையும் செய்யாது நிதியையும் வழங்காது கைவிட்டு துரோகம் செய்தமை மாத்திரமன்றி எதிரணி வேட்பாளரின் வெற்றிக்கு தனது சகாக்களை துணை புரிய சொன்னதன் மூலமும் பாரிய துரோகத்தை அரங்கேற்றினார்.
அதன் அடிப்படையிலேயே இந்த ஜனாதிபதி தேர்தலிலும் சுயேட்சை வேட்பாளரான தான் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை சஜித் பிரேமதாச வெற்றி பெற்று விடக் கூடாது என்பதற்காக பல்வேறு சூழ்ச்சிகளையும் குழிபறிப்புகளையும் ரணில் விக்ரமசிங்க அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றார் என்பது மிக தெளிவாக புலனாகின்றது.
எனவே இந்த சதிகளையும் குழிபறிப்புகளையும் முறியடித்து இத் தேர்தலில் வெற்றி பெற்று இந்நாட்டின் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார் என்பதை திடமாக கூறிக் கொள்கிறேன்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |