கல்வியில் நிலவும் ஏற்றத்தாழ்வு களையப்பட வேண்டும் - சஜித் பிரேமதாச
ஒரு நாடாக அபிவிருத்தியடைய வேண்டுமானால்,அறிவை மையமாகக் கொண்ட பொருளாதாரம் கட்டமைக்கப்பட வேண்டும் .இதற்கு கல்வி முறை சரியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
நாட்டின் கல்வித் துறையில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தாமல் அனைவரும் ஆங்கில மொழிக் கல்வியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை ரன்மினிதென்ன கனிஷ்ட வித்தியாலயத்தில் இன்று(06) நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமெனில் கல்வியில் நிலவும் ஏற்றத்தாழ்வு களையப்பட வேண்டும்.
நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளையும் சர்வதேச தரம் வாய்ந்த பாடசாலைகளாக அபிவிருத்தி செய்வதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும்.
எமது நாட்டின் பாடசாலைகளால் மின்கட்டணத்தைக் கூட செலுத்த முடியாத நிலையில், தலைநகரின் கண்ணாடி அறைகளுக்குள்ளேயே இருந்து கொண்டு நாட்டின் தலைவர்கள் டிஜிட்டல் புரட்சி குறித்து பேசும்போது கிராமப்புற பாடசாலைகளில் IT ஆசிரியர்கள் இல்லை.
உலகில் ஏனைய நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் வரையில் நாம் உள்ளக ரீதீயாக மாவீரர்களாகவே எண்ணிக்கொண்டாலும், நாடு உலகிற்கு திறந்து விடப்பட்டு சர்வதேச போட்டித் தன்மைக்குள் பிரவேசிப்போமேயானால் நாம் மிகவும் கீழ்நிலையில் தான் இருப்போம்.” - என்றார்.
