மின்கட்டணத்தைக் குறைக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் சஜித் மனு தாக்கல்
நாட்டில் தற்போதுள்ள மின்சார கட்டணத்தை குறைக்குமாறு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்றை இன்று (08) தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்தரணி ஷியாமலி அத்துகோரல ஊடாக எதிர்க்கட்சித் தலைவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபை, மின்சக்தி அமைச்சர், அந்த அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
மின்சார கட்டண அதிகரிப்பு
இலங்கை மின்சார சபைக்கு 52 பில்லியன் ரூபாய் இலாபம் கிடைத்துள்ளது. எனினும், நியாமற்ற வகையில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டதன் மூலம் 60 இலட்சம் மின்சார பாவனையாளர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி இந்த அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி தமது கட்சி உறுப்புரிமையை ரத்து செய்ததன் ஊடாக தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாவதை தடுக்கும் வகையில் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, தாக்கல் செய்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டயனா கமகே தாக்கல் செய்த மனு
குறித்த மனு இன்று (08)உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனுவில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார உள்ளிட்ட 11 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை உள்ளிட்ட தமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரித்து, கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை வலுவற்றதாக்குமாறும் டயனா கமகே குறித்த மனுவில் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |