மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் திடீர் பரிசுகள்! கிண்டலாக கூறிய எதிர்க்கட்சித் தலைவர் (படங்கள்)
தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு அவ்வப்போது புதிய பரிசுகளை வழங்கி வருகிறது எனவும், உரம் வழங்கும் நடைமுறையை இல்லாமலாக்கிய பரிசு, வெடிக்கும் எரிவாயு சிலிண்டர்கள் போன்ற பரிசுகளில் சமீபத்திய பரிசாக அடுத்த சில மாதங்களுக்கு மின்வெட்டை ஏற்படுத்தும் பரிசே அவ்வாறு புதிய பரிசாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
சுபிட்சத்தின் தொலைநோக்கு என்ற பார்வைக்குப் பதிலாக இருளின் தொலைநோக்கு பார்வையையே அரசாங்கம் செயல்படுத்தி வருவதாகவும் அவர் கி்ண்டலாக தெரிவித்துள்ளார்.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு இருபத்து ஒன்பது இலட்சத்து தொன்னூராயிரம் ரூபா
(29 90,000) பெறுமதியான அத்தியாவசிய வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கி வைத்து கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவே ஆட்சிக்கு வந்ததாகவும் ஆனால், அரசாங்கத்திடம் இருந்து மக்களைப் பாதுகாப்பதே நோக்கமாக இருக்கின்றது.
கருத்து சுதந்திரம், பேச்சு உரிமை, அரசியல் சுதந்திரம் போன்ற அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் மீறிச் செயல்படுகின்றது. 24 மணி நேரமும் மக்களின் உரிமைகளை மீறும் அரசாங்கமே இன்று ஆட்சியில் இருக்கின்றது.
இருநூறு மில்லியனுக்கும் மேல் வரி வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு 25 சதவீதம் மிகைக் கட்டண அறவீட்டிற்கு ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட 11 நிதியங்கள் உள்ளடக்கப்படவில்லை என நிதியமைச்சர் கூற வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தினாலயே நிதியங்களில் கை வைக்கும் முயற்சியில் அரசாங்கம் ஒரு அடி பின்வாங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





