தமது அரசியல் கௌரவத்தை அழிக்கும் செயற்பாடுகள் நடைபெறுவதாக சஜித் குற்றச்சாட்டு!
ஐக்கிய மக்கள் சக்திக்கும், பேராயர் கா்தினால் மல்கம் ரஞ்சித்துக்கும் இடையில் தவறானக் கருத்துக்களை உருவாக்கி, தமது அரசியல் கௌரவத்தை அழிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக சிறிலங்கா எதிர்க்கட்சி தலைவார் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
குற்றப்புலனாய்வுத்துறைத் தலைவரின் ஆலோசனையின்படி தான் செயற்படுவதாக வெளியாகும் செய்தியையும் சஜித் பிரேமதாச மறுத்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள பேராயர் இல்லத்தில், பேராயர் கா்தினால் மல்கம் ரஞ்சித்தை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
கடந்த சில காலங்களாக எனக்கும் பேராயருக்கும் இடையிலும், அதே போல் கத்தோலிக்க அருட்தந்தையர்களுக்கும், கத்தோலிக்க மக்களுக்கும் மத்தியில் தவறான ஒரு விம்பத்தை உருவாக்கி அரசியல் செல்வாக்கை அழிக்கும் நோக்கில் கத்தோலிக்க மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை அழிக்கும் நோக்கில் பாரிய சூழ்ச்சியொன்று முன்னெடுக்கப்பட்டது.
பேராயரை சந்தித்து அந்த சூழ்ச்சியை பற்றி தெளிவு படுத்தினேன். எனக்கும் பேராயருக்கும் கத்தோலிக்க மக்களுக்கும் இடையில் இருந்த அந்த உறவு காரணமாக ஒரு சில அரசியல்வாதிகள் கூட்டத்துக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது.
இதனால் பாரிய சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டது. நான் உளவுத்துறையின் தலைவரின் அறிவுறுதல்களுக்கு அமைய செயற்படும் எதிர்க்கட்சித் தலைவர் எனக் கூறுகின்றார்கள். நான் ஒன்றை தெளிவாக கூறிக்கொள்கிறேன் எதிர்க்கட்சி தலைவராக நான் செயற்பட யாருடைய ஆலோசனைகளையும் நான் பெறவேண்டியதில்லை.
எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவருடைய அல்லது வேறு யாருடைய ஆலோசனைகளையும் கேட்டு அரசியல் செய்ய எனக்கு தெரியாது. நான் அப்படி செய்யவும் மாட்டேன். முன்னர் இருந்தவர்களுக்கு அந்த பழக்கம் இருந்திருக்கலாம்.
ஆனால் எனக்கு அந்த பழக்கம் இல்லை. உயிர்த்த ஞாயிரு தாக்குதலின் பின்னணியில் உண்மையில் யார் செயற்பட்டது என்பதை நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். இதனால் நிறைய குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. நிறைய உயிர் இழப்பு ஏற்பட்டது.
இதனை எதற்கு செய்தர்கள்? யார் செய்தர்கள்? இவற்றுக்கு பதில் மக்களுக்கு தேவை, இதை தெரிந்து கொள்வதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பு. இதை கண்டுபிடிக்க சுயதீனமான உண்மையான ஒரு விசாரணை தேவை எனவும் தெரிவித்தார்.