நாட்டில் தலைவிரித்தாடும் திருட்டுக்கள் - சஜித் பிரேமதாச பகிரங்கக் குற்றச்சாட்டு (படங்கள்)
நாட்டில் தலைவிரித்தாடுவது திருட்டும் ஊழல் மற்றும் இலஞ்சமும் மட்டுமே. செல்வம் கோடிக்கணக்கான ரூபாய்கள் ஊழல்களால் விழுங்கப்படுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
எனவே உடனடியாக செய்ய வேண்டியது நாட்டில் ஊழலை இல்லாதொழிப்பதாகும் என்றும் இந் நிலையை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நிபந்தனையின்றி முன் நிற்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் “பிரபஞ்சம்” திட்டத்தின் மற்றுமொரு கட்டத்தை திருகோணமலை - சாம்பல்தீவு தமிழ் வித்தியாலயத்திற்கு வழங்கி வைத்த பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
நவீன உலகில் வளமான டிஜிட்டல் எதிர்காலத்திற்காக இந்நாட்டின் இளைய தலைமுறையை, தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற, ஸ்மார்ட் கணனி பயன்பாட்டில் தேர்ச்சி பெற்ற சமூகமாக கட்டியெழுப்பும் 'பிரபஞ்சம்' முன்னோடித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா (750,000) மதிப்பிலான வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வானது ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண உட்பட தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






