காட்டு நீதியை அமுல்படுத்த இடமளியோம் - சஜித் திட்டவட்டம்
தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை எனத் தெரிவித்துள்ள எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, காட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இடமளிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
மக்களால் தெரிவான ஜனநாயக அரசாங்கமே இலங்கையில் ஆட்சியில் இருப்பதாகவும் ஏகாதிபத்திய விதத்தில் தேவையான வகையில் படுகொலைகளை செய்வதற்கு இடமளிக்க முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இரு நாட்களில் இருவர் உயிரிழந்த சம்பவங்களுக்கு கண்டனம் வெளியிடும் வகையில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது பேஸ்புக் தளத்தில் காணொளி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில், தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அது எமது கொள்கை எனினும், சட்டத்தின் ஆட்சியை நாம் காப்பாற்ற வேண்டும். காட்டு நீதியை அமுல்படுத்த எமக்கு இடமளிக்க முடியாது.
இந்த நாட்டில் செயற்படுவது ஏகாதிபத்திய அரசாங்கமல்ல. மக்கள் வாக்களிப்பில் தெரிவான ஜனநாயக அரசாங்கமே இங்கு ஆட்சியில் இருக்கின்றது. ஏகாதிபத்திய விதத்தில் தமக்கு தேவையான வகையில் படுகொலைகளை செய்வதற்கு இடமளிக்க முடியாது.
தொடர் கொலைகள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது. இதன் ஊடாக மக்களின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. மனித உரிமைகள் விடயத்தில் எமது நாட்டிற்கு எதிராக சவால்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், இந்த நாட்டு மக்களின் பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்த வேண்டும். மனித உரிமைகளை பலப்படுத்த வேண்டும். அதனை மீறிச் செயற்படக் கூடாது.
குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அதில் மாற்றமில்லை. எனினும் அவர்களுக்கு எதிராக சட்டம் தான் செயற்பட வேண்டும். கொலைகளை அனுமதிக்க முடியாது.
தனிநபர்களை அல்லது குழுக்களை காப்பாற்றவா இந்த கொலைகள் இடம்பெறுகின்றன? கொலைகாரர்களுடன் காணப்பட்ட தொடர்புகளை மூடிமறைப்பதற்காக இந்த சட்டவிரோதக் கொலைகள் இடம்பெறுகின்றன.
நாங்கள் மனித உரிமைகளை பாதுகாக்க முன்னிற்கின்றோம். இந்தச் சட்டவிரோத கொலைகள் இடம்பெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
இது தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இதற்கான மூலக்காரணம் கண்டறியப்பட வேண்டும் என்றுள்ளது.